அழகு என்பதை புறத்தோற்றத்தை வைத்தே அளவிடுகிறோம். ஆனால், அந்த அழகு, உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியம், உணவு மற்றும் வாழ்க்கை முறைப் பழக்கங்களின் பிரதிபலிப்பு என்பதைப் பலரும் உணர்வதில்லை. ”எந்த ஒரு அழகுப் பிரச்னைக்கும் மேலோட்டமாக எடுத்துக் கொள்கிற சிகிச்சைகள் தற்காலிகப் பலனைத் தருமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது. புற அழகு என்பது ஒவ்வொருவரது உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் அளவுகளின் சமநிலையைப் பொறுத் தது” என்கிறார் சஞ்சீவனம் நேச்சுரல் பியூட்டி சென்டரை சேர்ந்த மருத்துவர் யாழினி. ”ஒவ்வொருவர் உடம்பிலும்
வாதம், பித்தம், கபம் என மூன்று தோஷங்களும் இருக்கும். அந்த மூன்றும் சமநிலையில் இருக்கின்றனவா என்பது தான் முக்கியம். எந்த தோஷம் கூடுகிறதோ அதன் பிரதிபலிப்பு வெளித்தோற்றத்தில் தெரியும். உதாரணத்துக்கு பித்தம் அதிகமானவர்களுக்கு உடல் கொதிப்பது, தலையில் சூடு, முடி உதிர்வு, பருக்கள் போன்றவை இருக்கலாம். வாதம் அதிகமானால் உடல் முழுக்க ஐஸ் போல சில்லென்று இருக்கும். மூட்டுக்களில் வலியிருக்கும். கபம் அதிகமிருந்தால் முடி உதிர்வு, தலை பாரமான உணர்வு, ஜலதோஷப் பிரச்னைகள் இருக்கும். முதலில் இந்த தோஷங்களின் அளவைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், மேலோட்டமாக அழகுப் பிரச்னைக்கு மட்டும் சிகிச்சை கொடுத்தால் அது பலன் தராது” என்கிறார் யாழினி. ”முடி உதிர்வா? ஊட்டச்சத்துக் குறைபாடா, ஹார்மோன் கோளாறா அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளா எனப் பார்க்க வேண்டும். மங்கு எனப்படுகிற பிக்மென்ட்டேஷன் பிரச்னைக்கும் ஹார்மோன் கோளாறோ, இரும்புச்சத்துக் குறைபாடோ, தலைக்கு உபயோகிக்கிற தவறான ‘டை’யோ காரணமாக இருக்கலாம். பொடுகுக்கு உடல் சூடு, வறண்ட மண்டைப் பகுதி, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, சரிவிகித உணவு உண்ணாமை போன்றவை காரணங்களாக இருக்கலாம். இவற்றுக்கும், உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் அளவுகளுக்குமான தொடர்பைத் தெரிந்துகொண்ட பிறகே அழகு சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னை மறுபடி வராமலிருக்கும். அழகும் மேம்படும்” யாழினி நிறுத்த, எல்லோருக்கும் பொதுவான, எளிமையான அழகு சிகிச்சைகள் சிலவற்றைப் பற்றி விளக்குகிறார் சஞ்சீவனத்தைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் அஞ்சலி. * பப்பாளிக் கூழ் 1 டேபிள்ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும் கலந்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவு பெறும். * கொத்தமல்லித் தழையையும் புதினாவையும் சம அளவு எடுத்து அரைத்து, எலுமிச்சை கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் வழிகிற சருமம் அழகு பெறுவதுடன், மன அழுத்தமும் சரியாகும். * பாதாமும் ஓட்ஸும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவிக் கழுவினால், சருமம் பளபளப்பு பெறும். பருக்கள் இருந்தாலோ, சென்சிட்டிவ் சருமமாக இருந்தாலோ, பாதாமை தவிர்க்கவும். * பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருவளையங்கள் மறையும். * நரை முடிப் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். ரத்த ஓட்டம் சீராக இல்லாததுகூட நரைக்குக் காரணமாகலாம். பாதாம் ஆயில் உபயோகிப்பது சிறந்தது. வறண்ட கூந்தல் உள்ளவர்கள் வெறும் ஹென்னாவை தலைக்கு உபயோகித்தால் முடி மேலும் வறண்டு போகும். எனவே, அதனுடன் நெல்லிக்காய், செம்பருத்தி கலந்து உபயோகிக்க வேண்டும். தினம் தினம்! * தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். அப்போதுதான் உடலிலுள்ள கழிவுகள் வெளியேறும். * தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பருக்கள் வராமல் தவிர்க்கலாம். கூந்தலுக்கும் ஆரோக்கியம். * நெல்லிக்காயை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும். கூந்தல் நரைப்பது தள்ளிப் போகும். * தினமும் மூன்று, நான்கு பாதாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதத் தேவை பூர்த்தியாகும். சருமமும் கூந்தலும் அழகு பெறும்.