அனைவருக்கும் வெள்ளை சருமத்தின் மீது ஆசை இருக்கும். அதற்காக கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவோம். விலை அதிகம் இருப்பதால், அப்படி வாங்கும் க்ரீம்களை முகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். கை மற்றும் கால்களை மறந்துவிடுவோம். அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை, தலை முதல் கால் வரை அனைத்திலும் உள்ளது. ஆகவே வெள்ளையாக இருக்க வேண்டுமென்றால், முகத்திற்கு மட்டுமன்றி, கை மற்றும் கால்களுக்கும் போதிய பராமரிப்பு கொடுக்க வேண்டும். சொல்லப்போனால் முகத்தை விட, கை மற்றும் கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம். ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம், முகத்தை விட, கை மற்றும் கால்களில் தான் அதிகம் உள்ளது. இதனால் கை மற்றும் கால்கள் கருப்பாக இருக்கும். இப்படி சூரியக்கதிர்களால் கருமையான கை மற்றும் கால்களை வெள்ளையாக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைத் தவறாமல் அன்றாடம் அல்லது வாரம் ஒருமுறை செய்து வந்தால், நிச்சயம் கை மற்றும் கால்களை வெள்ளையாகப் பராமரிக்கலாம். சரி, இப்போது கை மற்றும் கால்களில் உள்ள கருமையைப் போக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!
ஒரு பௌல் குளிர்ச்சியான தயிரில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும். வெள்ளரிக்காயை துருவிக் கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். தினமும் தக்காளியை இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு முகம், கை மற்றும் கால்களில் தேய்த்து ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கும். 5-10 பாதாமை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து அதில் 5 துணிகள் சந்தன எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். பப்பாளியை மசித்து, அதனை கருமையாக உள்ள முகம், கை மற்றும் கால்களில் தடவி மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் சருமத்தில் உள்ள கருமை மறையும். மஞ்சள் அனைத்துவித சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைத் தரும். அதிலும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க மஞ்சள் தூளில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். உருளைக்கிழங்கை வெட்டி, அதனைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை ஜெல்லை தினமும் முகம், கை மற்றும் கால்களில் தடவி நன்கு உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கும். எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி, பின் துணியால் துடைத்து, எண்ணெயை தடவ வேண்டும்.