மரபணு காரணங்களால் பரம்பரையாகச் சிலருக்கு முடி உதிர்தல், வழுக்கை ஏற்படுகிறது. சத்தான உணவுகள், மாத்திரைகள், களிம்புகள் மூலம் இதற்குத் தீர்வு காணலாம். எனினும், அவை ஆரம்பகாலத்தில் ஏற்படும் முடி உதிர்வுக்கு மட்டுமே பயன்படும். சிகிச்சையை நிறுத்திவிட்டால் மீண்டும் முடி உதிர்வு ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும்போது முடிமாற்று சிகிச்சையே தீர்வாகும். தீக்காயத்தால் தழும்புகள் ஏற்பட்டு, முடி வளராத நிலையில் இருப்பவர்களுக்கும் முடி மாற்று சிகிச்சையே தீர்வு. அனைத்து விதமான வழுக்கைத் தலைக்கும் முடிமாற்று சிகிச்சை செய்யலாம். நிரந்தரத் தீர்வாக இது அமைவதாலும் சிகிச்சையில் வெற்றி விகிதம் அதிகமாக உள்ளதாலும் இந்தச் சிகிச்சைக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது.
எஃப்.யூ.டி (Follicular Unit Transfer – FUT) மற்றும் எஃப்.யூ.இ (Follicular Unit Extraction – FUE) என இரண்டு விதமான முடி மாற்று சிகிச்சைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் ரே உட்ஸ் என்பவரால் 1989-ம் ஆண்டு எஃப்.யு.இ சிகிச்சை முதன்முதலில் செய்யப்பட்டது.